Focus ஆக படிக்க
ஒரிடத்தில் ஒரு மணி நேரமாவது, குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது புத்தகத்தை வைத்து இருக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும்.
அறிவில் மிக சிறப்பாக பல சிறார்கள் இந்த Focus இல்லாமல் தங்கள் Academic கல்வியில் தோல்வியும் குறைவும் கொண்டு திண்டாடுவார்கள்.
எப்படி அவர்களை Focus ஆக ஒரிடத்தில் அமர்ந்து படிக்க செய்வது ?
பெற்றோராக சில விஷயங்களை செய்வதின் மூலம் உங்கள் குழந்தைகளின் பாடம் படிக்கும் இயல்பில் சில ஆரோக்கியமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும்.
குழந்தைகள் தங்கள் அம்மா அப்பாவின் செயல்களைத்தான் அப்படியே காப்பி அடிக்கும் என்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த இயல்பு +2 படிக்கும் வரை இருக்கும். பிளஸ் டூ படிக்கும்வரை சிறாராக இருக்கும்
ஒருவர் தன் அப்பா அம்மா செயலை பதினாறு வயது வரை கூர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.
இந்த விஷயத்தை பயன்படுத்தி பெற்றோராக நீங்கள் இதை செய்யலாம்.
- நீங்கள் ஒரு விஷயத்தை ஆழ்ந்து வாசிக்கப் போவதாக சொல்லுங்கள்.
- அது உங்கள் சப்ஜெக்ட் புத்தகமாய் இருந்தால் மிக நல்லது. ஒரு தேர்வுக்கோ அல்லது மேற்படிப்புக்கோ அல்லது அலுவல விஷயமான கோப்பாகவோ இருக்கட்டும்.
- ஒரு டேபிள் சேர் பேப்பர் பேனா செட்டப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- “மினிமம் ஒன் அவர் படிக்க போறேன் என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று ஒரு அறிவிப்பை வெளியிடுங்கள்.
- தயவு செய்து கம்யூட்டரில் படிக்கிறேன் என்று உட்காராதீர்கள். அது ஒரு Hard copy ஆக இருக்கட்டும்.
- புத்தகத்தை வைத்து முகத்தை சீரியசாக வைத்து உட்கார்ந்து விடுங்கள். முடிந்தால் நிஜமாகவே சீரியசாக படியுங்கள்.
- உங்கள் குழந்தைகள் உங்களை வந்து பார்த்தாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு அவர்களை ஒருமுறை பார்த்து விட்டு மறுபடி புத்தகத்துக்குள் தலையை விட்டுக் கொள்ளுங்கள்.
- அவர்கள் ஏதாவது பேசவந்தால் ஆர்வமே இல்லாமல் “அப்புறம்” என்று செய்கை காட்டுங்கள். அதையும் மீறி பேசினால் “அப்புறம் பேசலாம்” என்று சாதரணமாக சொல்லிவிட்டு மறுபடி புத்தகத்துக்குள் தலையை விட்டுக் கொள்ளுங்கள்.
- அந்த ஒரு மணி நேரமும் நீர் குடிக்க கூட எழுந்திருக்காதீர்கள். சிறுநீர் கழிக்க எழுந்திருக்காதீர்கள்.
- படிப்பதும், குறிப்பு எடுப்பதும், புத்தகத்தில் அடிக்கோடிடுவதும், லேசாக முணு முணுத்து சொல்லிப் பார்ப்பது, மிக லேசாக விரலை அங்கும் இங்கும் அசைத்து படிப்பில் ஆர்வம் காட்டுவது. மெல்ல வாய்க்குள் “ ஒக்கே ஒக்கே புரிஞ்சிட்டு புரிஞ்சிட்டு” என்று சொல்வதுமாக அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு மிதமான ஆக்டிங்கோ அல்லது உண்மையையோ வெளிப்படுத்த வேண்டும்.
- ஒரு மணி நேரம் தாண்டி ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் இழுத்து பின் முடியுங்கள்.
எல்லாம் முடிந்த பிறகு மெல்லி குரலில் “ம்ம்ம் ஒரு டாப்பிக் எடுத்தேன். படிச்சி முடிச்சிட்டேன்” என்று சொல்லுங்கள். பிறகு அந்த டாப்பிக்கை எடுக்காமல் நான் படித்தேன் பார் என்றெல்லாம் சொல்லாமல் சகஜமாக குழந்தைகளிடம் பேசி சிரித்துக் கொண்டு இருங்கள்.
அம்மாவோ, அப்பாவோ படிக்கிறேன் என்று ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்தால் அதை படித்து முடிக்கும்வரை வேறு எந்த விஷயத்திலும் மனதை அலைபாய விட மாட்டார்கள். ஒரே ஸ்டிரெச்சில் அமர்ந்து படிப்பார்கள். மனம் சிதறாமல் படிப்பார்கள் என்ற விஷயம் சிறார்கள் மனதில் படிந்து விடும்.
அவர்கள் படிக்கும் போதும் அது போல பாவனையை முதலில் வெளிப்படுத்த ஆரம்பிப்பார்கள். அப்படி படிக்கும் வாய்ப்பு அதிகம்.
எப்படி ஒருவர் சிலம்பம் சுத்துவது ஹீரோயிக்காக இருக்குமோ, எப்படி ஒருவர் சாகசம் செய்து காட்டினால் ஹீரோயிக்காக இருக்குமோ அப்படித்தான் ஒருவர் கூர்ந்து மனம் சிதறாமல் படிப்பதை பார்க்கவும் ஹீரோயிக்காக இருக்கும்.
அதை நாமும் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நிச்சயம் செய்வார்கள்.
ஒரு இடத்தில் இருந்து படிக்கும் குணம் வளரும். பள்ளி சார்ந்த கல்வி என்றில்லை. உலகில் எந்த கல்விக்கும் அப்படி ஒரு ஸ்டிரெச்சில் ஒரிடத்தில் அமர்ந்து படிப்பது மிக முக்கியம்.
அப்படி அரைமணி நேரம் அவர்கள் ஒரே ஸ்டிரெச்சில் படித்தால் கூட மிக வேகமாய் கற்றுக் கொள்வார்கள்.
படபடப்பு, மனம் நிலையில்லாமல் இருப்பது, கவனச்சிதறல் எல்லாம் கடந்து அரைமணி நேரம் ஒரே ஸ்டிரச்சில் படிக்க உங்கள் குழந்தைகளை தயார் படுத்தினால் அவர்களுக்கு நீங்கள் சிறந்த நன்மையை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் குழந்தையின் வயது ஒன்றில் இருந்து பத்துக்குள் என்றால் இது இன்னும் நன்றாக வொர்க் அவுட் ஆகும்.
ஒரு இடத்துல உக்காந்து படி உக்காந்து படி என்று திரும்ப திரும்ப சொல்வதற்கு பதிலாக பெற்றோராகிய நீங்களே உட்கார்ந்து படிப்பது என்றால் என்ன என்று உங்கள் குழந்தைகளுக்கு செயலால் காட்டி விடுங்கள்.
நிச்சயம் இது பலனளிக்கும். நம்பி இந்த ”கல்வி கற்கும் உளவியல் பயிற்சியை” உங்கள் ”ஒரு மணி நேரம் விடாது கற்பேன் “செயல் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.